திருச்சி:
கடந்த ஜூலை மாதம் கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு அதிக வெள்ள நீர் வந்தது.
இதனால் மேட்டூர் அணை வேக,வேகமாக நிரம்பியது. ஆனால் அப்போதே மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கர்நாடகாவில் மழை நின்றதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் கடந்த மாதம் வரை 104 அடி கொள்ளளவுடன் மேட்டூர் அணை காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 12ந்தேதி முதல் 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட்டார்.
இந்த நீர் டெல்டா மாவட்டங்களின் கடைமடை வாய்க்கால் பகுதிகளுக்கு செல்லாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 18 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளை வாய்க்கால்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட கடைமடை வாய்க்கால்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து அணை முழு கொள்ளளவை எட்டாததால் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க வசதியாக அணை திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
20 ஆயிரம் கனஅடிக்கு மேல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் கடைமடை வாய்க்கால் வரை தண்ணீர் சென்று சேர்ந்து டெல்டா மாவட்ட சம்பா சாகுபடி சிறப்பாக நடக்கும் என்று விவசாயிகள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைக்கும் வகையில் மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் நல்ல மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு மீண்டும் அதிக அளவில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேக,வேகமாக நிரம்பி வருகிறது.
இன்று காலை அணையின் நீர் மட்டம் 119.34 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 73,307 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மேட்டூர் அணை அதன் முழுகொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
மேட்டூர் அணை 120 அடியை எட்டிய பிறகு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படும். தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி நீர் வரை வந்து கொண்டிருப்பதால் அந்த நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.
தற்போது காவிரி ஆற்றில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 25 ஆயிரம் கனஅடிநீர் சென்று கொண்டிருக்கிறது. திருச்சி முக்கொம்பிற்கு வரும் நீர் காவிரி ஆற்றின் வழியாக கல்லணை சென்று அங்கிருந்து டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் தொடர் மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 75 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும் போது ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்படும். இதனால் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூளும்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை 4 வழிச்சாலைக்கு கிழக்கில் உள்ள பகுதிகள் தான் தாழ்வான பகுதிகளாகும். ஸ்ரீரங்கம், அந்தநல்லூர், திருவெறும்பூர், கிளிக்கூண்டு, கூத்தைப்பார், திருச்சி காவிரி சிந்தாமணி படித்துறை உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடத்திற்கு செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்க, துணி துவைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுபணித்துறை மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் மூலம் கரையோர பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி முக்கொம்பும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. புதியதாக கட்டப்பட்டுள்ள முக்கொம்பு கொள்ளிடம் காப்பணையையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.