நெல்லை:
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள பண்பொழி வண்டாள பொட்டல் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி(வயது35). இவரது சொந்த ஊர் சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூர் அருகே உள்ள வீராணம். நேற்று வீராணத்துக்கு வந்த சுப்புலட்சுமி வீடு கட்டுவதற்காக கடனுக்கு ரூ.1.5 லட்சம் வாங்கினார்.
அந்த பணத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார். சுரண்டை பஸ் நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு பஸ் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் சுப்புலட்சுமி பையில் இருந்த ரூ.1.5 லட்சத்தை அபேஸ் செய்தனர். பணம் பறிபோனதை அறிந்த சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி சுரண்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சுரண்டை பஸ் நிலையத்தில் அடிக்கடி திருட்டு மற்றும் ஜேப்படி சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒரு கும்பல் இதை வாடிக்கையாக கொண்டு திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபற்றி போலீசில் புகார் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம். மேலும் பாதிக்கப்பட்ட சிலர் போலீசில் புகார் செய்யாமலேயே சென்றுவிடுகிறார்கள்.எனவே இதுபற்றி உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.