செய்திகள்

ரூ.30 லட்சம் மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?: சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

பண மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு, தமிழக போலீசார் அமைச்சரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மாலை மலர்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.குமார்.

கட்டிட ஒப்பந்தக்காரரான இவர் சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார். அந்த வீட்டில் ஏற்கனவே வசித்து வந்தவர் வெளியேற மறுத்து காலதாமதம் செய்து வந்தார்.

இதையடுத்து அந்த நபரை வெளியேற்ற அமைச்சர் காமராஜின் உதவியை ஒப்பந்தக்காரர் எஸ்.வி. எஸ்.குமார் நாடினார். இதற்காக அவர் அமைச்சர் காமராஜுக்கு ரூ.30 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் உறுதியளித்தப்படி இந்த வீடு விவகாரத்தை அமைச்சர் காமராஜ் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதைத் தொடர்ந்து ரூ.30 லட்சம் பணத்தை அமைச்சர் காமராஜிடம் குமார் திருப்பிக் கேட்டார்.

அமைச்சர் காமராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. அதோடு அவர் குமாரை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் குமார் உள்ளூர் போலீஸ் மற்றும் கோர்ட்டை நாடினார். எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு தொடர்ந்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால் அமைச்சர் காமராஜ் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் காமராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நீதிபதிகளுக்கு தெரிய வந்தது.

இதனால் நீதிபதிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டபிறகும் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்படாததற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிபதிகள் இதுதொடர்பாக கூறியதாவது:-

அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அர்த்தமா? அவர் சட்டத்துக்கும் மேலானவரா? அவரும் சட்டத்துக்குட்பட்டவர்தான்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன்? அமைச்சர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதும் அவர் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

இவ்வாறு நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினார்கள்.

அப்போது அமைச்சர் காமராஜ் சார்பில் ஆஜரான தமிழக அரசு வக்கீல், “மனுதாரர் மீது இது தொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

நீதிபதிகள் கூறுகையில், “தமிழக அரசு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துகிறது. அமைச்சர் காமராஜிடம் தமிழக போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தயாரிக்க வேண்டும்.

அந்த வழக்கு விசாரணை அறிக்கையையும் மற்றும் வழக்கு ஆவணங்களையும் வரும் 8-ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடிவு உள்ளனர்.

தற்போது மன்னார்குடி டி.எஸ்.பி. பதவி காலியாக உள்ளது. பொறுப்பு டி.எஸ்.பி.க்கள் தான் பணியை கவனித்து வருகின்றனர்.