தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தோடு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு எந்திரம் சில வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம், முறைகேடுகளை தவிர்க்க வழிவகை செய்கிறது.
எனவே இந்த ஒப்புகை சீட்டு எந்திரத்தை குறைந்தது 30 சதவீத அளவுக்காவது பயன்படுத்த வேண்டும். மேலும் அதில் பதிவாகும் ஒப்புகை சீட்டையும் எண்ணி வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளோடு சரிபார்க்க வேண்டும். குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் இந்த ஒப்புகை சீட்டுகளை கைகளால் எண்ண வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வழிமுறைகளை வகுத்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.