செய்திகள்

நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி போர்க்கொடி

நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எல்லா நீதிபதிகளையும் அழைத்து விவாதிக்குமாறு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஜே.செல்லமேஸ்வர். இவர், கடந்த ஜனவரி 12-ந்தேதி, வேறு 3 மூத்த நீதிபதிகளுடன் சேர்ந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, வழக்குகளை ஒதுக்குவது குறித்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

ஜூன் 22-ந்தேதி ஓய்வு பெறும் அவர், மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். மத்திய அரசுக்கு எதிராக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு 6 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதன் நகல்களை சுப்ரீம் கோர்ட்டின் மற்ற 22 நீதிபதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில், நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா பட் மீது கீழ்கோர்ட்டில் பணியாற்றும் ஒரு பெண் நீதிபதி புகார் தெரிவித்ததால், கிருஷ்ணா பட் மீது விசாரணை நடத்த 2016-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உத்தரவிட்டார். அந்த விசாரணையில், கிருஷ்ணா பட் நிரபராதி என்று தெரிய வந்தது.

அதன்பிறகு, அவரை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் 2 தடவை சிபாரிசு செய்தது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை.

மேலும், கிருஷ்ணா பட் மீது விசாரணை நடத்துமாறு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரிக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதன்பேரில், தினேஷ் மகேஸ்வரியும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் அரசு நிர்வாகத்தின் (மத்திய அரசு) விருப்பத்தை நிறைவேற்றுவதில்தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அரசு நிர்வாகத்தின் இந்த தலையீடு அதிர்ச்சி அளிக்கிறது.

எந்த கடித தொடர்பும், விளக்கம் கோருவதும், இதர விஷயங்களும் சுப்ரீம் கோர்ட்டு மூலமாகத்தான் நடக்க வேண்டும். ஆனால், பொய் என்று நிரூபணமான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு, சுப்ரீம் கோர்ட்டை புறந்தள்ளி விட்டு, ஐகோர்ட்டுக்கு மத்திய அரசு நேரடியாக உத்தரவிட்ட சம்பவம், இதற்கு முன்பு நடந்ததே இல்லை. நமது சிபாரிசை மறுஆய்வு செய்யுமாறு ஒரு ஐகோர்ட்டை மத்திய அரசு கேட்பது முறையற்றது.

இதே நிலை நீடித்தால், ஐகோர்ட்டுகளை மத்திய அரசு நேரடியாக தொடர்பு கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளில் என்ன உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடும் நாள், வெகு தூரத்தில் இல்லை.

எந்த மாநிலத்திலும், அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையிலான நெருக்கமானது, ஜனநாயகத்துக்கு மரண ஒலியாகவே இருக்கும்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான நாம், நமது சுதந்திரத்தையும், நேர்மையையும் அரசு நிர்வாகத்திடம் விட்டுக்கொடுத்து விட்டோம் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. நிர்வாகம் பொறுமையின்றி உள்ளது. நீதித்துறைக்கும் கீழ்ப்படிவது இல்லை. தலைமை நீதிபதிகளை தங்களது தலைமை செயலகத்தின் துறை தலைவர்கள் போல் நடத்தும் முயற்சி நடந்து வருகிறது.

நீதிபதிகள் நியமனம் குறித்த கொலிஜியத்தின் சிபாரிசுகள் மீது மத்திய அரசு முடிவு எடுப்பதில் தாமதம் செய்கிறது. நமது சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வது விதிவிலக்காகவும், கிடப்பில் போடுவது விதியாகவும் மாறிவிட்டது. இதனால் திறமையான நீதிபதிகள் நிராகரிக்கப்படுகிறார்கள். இந்த அனுபவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

ஆகவே, நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு பற்றி எல்லா நீதிபதிகளும் அடங்கிய ஒட்டுமொத்த கோர்ட்டையும் கூட்டி விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் கூறியுள்ளார்.