கேப்டவுடன்:
தென் ஆப்பிரிக்க அதிபராக ஜேக்கப் ஷுமா பதவி வகித்து வருகிறார். இவர் மீது 783 ஊழல் வழக்குகள் உள்ளன.
ராணுவத்துக்கு போர் விமானங்கள், ரோந்து படகுகள் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து இவற்றை வாங்கியதாகவும், வர்த்தகர் ஷபீர் ஷாயிக்கிடம் இருந்து கமிஷன் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டு கடந்த 2005-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.
இவை தவிர பண மோசடி. பதவியை பயன்படுத்தி பலரை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் இவர் மீது உள்ளன. இந்த வழக்குகள் கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
அதையடுத்து கடந்த ஆண்டு எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணி அதிபர் ஜேக்கப் ஷுமா மீது ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது. அதில் அவர் இந்த வழக்குகளை எதிர் கொள்ள வேண்டும். அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தீர்ப்பு கூறியது.
அதை எதிர்த்து அதிபர் ஷுமா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது. அதாவது ஷூமா மீதான 783 வழக்குகளையும் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு தனக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாகவும், அதை எதிர்ப்பதாகவும் ஷுமா தெரிவித்துள்ளார். இவரது பதவிக் காலம் வருகிற 2019-ம் ஆண்டுடன் முடிகிறது. இவர் ஏற்கனவே 2 தடவை அதிபர் பதவி வகித்துள்ளார். எனவே அவர் இனி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அவருக்கு மிக பின்னடைவாக கருதப்படுகிறது.