செய்திகள்

கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம்

மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற முடியாத தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PassiveEuthanasia

மாலை மலர்

புதுடெல்லி:

விபத்துகளில் சிக்குபவர்கள் அல்லது கடுமையான வியாதிகளால் பாதிக்கப்படுபவர்கள் இனி பிழைக்கமாட்டார்கள் என்ற நிலை ஏற்படுவதுண்டு. என்றாலும் அவர்களுக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும்.

சில சமயங்களில் நோயாளிகள் கோமா நிலைக்கும் சென்று விடுவதுண்டு. அவர்கள் முழுமையாக குணம் அடைய வாய்ப்புகள் இல்லை என்ற நிலை இருக்கும்பட்சத்தில் அவர்களை கருணை கொலை செய்யலாம் என்று கோரிக்கை எழுவது உண்டு.

சில நாடுகளில் உயிருக்கு போராடுபவர்களை கருணை கொலை செய்ய விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கியுள்ளனர். இந்தியாவில் இதுவரை அத்தகைய கருணை கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லாமல் இருந்து வந்தது.

இந்தியாவில் பல மாநிலங்களில் பலர் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தனர். அவையெல்லாம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அருணா சான்பாக் என்ற நர்சு 1973-ம் ஆண்டு மருத்துவமனை ஊழியர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டார். அப்போது அவரது கழுத்து எலும்பு நொறுங்கியதால் அவர் உணர்ச்சியற்று 37 ஆண்டு களாக கோமா நிலையில் கிடந்தார்.

அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று எழுத்தாளர் பிங்கு விரானி என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு கருணைக் கொலைக்கு அனுமதி இல்லை என்று கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வெளியிட்டது.

முன்னதாக கடந்த 2005-ம் ஆண்டு என்.ஜி.ஒ. அமைப்பு ஒன்று நாடெங்கும் கருணை கொலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஆதரவாக பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்தது. அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், “தீராத வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் அந்த நோயாளிகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

அந்த மனு மீதான வழக்கு முதலில் தனி நீதிபதி கோர்ட்டில் நடந்தது. பிறகு 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, கண்வில்கர், சந்திரசூட், அசோக் பூசன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந்தேதி இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதிகள் 5 பேரும் இந்த வழக்கில் தனித்தனியாக வெவ்வேறு விதமாக கருத்துக்களை எழுதி இருந்தனர். என்றாலும் நோயாளிகளை கருணை கொலை செய்யலாம் என்ற விசயத்தில் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துக்களுடன் தீர்ப்பை எழுதி இருந்தனர். அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியிட்டார். தீர்ப்பு விவரம் வருமாறு:-

மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உள்ளது. மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் மீள முடியாத நிலையில் இருந்தால் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம்.

ஒரு நோயாளி முழுமையாக நலம் பெற வழியில்லை என்று தெரிய வந்தால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுப்பதில் பலன் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தால் கருணை கொலை செய்யலாம். அது போல தீராத நோய் தாக்கியவர்களுக்கும் சில விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மரணத்துக்கு அனுமதி கொடுக்கலாம்.

கோமாநிலையில் இருப்பவர்கள் மருத்துவ உபகரணங்கள் உதவிகளுடன் சிகிச்சையை நீடித்து வருவதுண்டு. அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கும் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிர்பிரிய அனுமதி கொடுக்கலாம். இதற்காக தனி நபர்கள் அறிக்கை தயார் செய்து வழங்க அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

கருணை கொலைக்கு எத்தகைய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விதிகளை வகுத்து உள்ளனர். அவற்றின் அடிப்படையில்தான் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் கருணை கொலை அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணை கொலை விசயத்தில் உரிய சட்ட மசோதா அமலுக்கு வரும்வரை இதை தங்களுடைய விதிமுறைகள் வழிகாட்டுதலுடன் நடைமுறைப்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். #PassiveEnthanasia #tamilnews