செய்திகள்

விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர் விளைந்து நிற்கும் நிலையில், அதனை பாதுகாத்து அறுவடை செய்ய குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீர் தேவையாக உள்ளது. சம்பா பயிரைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு நிர்பந்தம் தந்து, கர்நாடகத்திடம் 15 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி 28-ந் தேதி காவிரிப் பாசன மாவட்டங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையும், போராட்டத்தையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கிறது.

இப்போராட்டத்தில் நான் திருவாரூரிலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம் தஞ்சையிலும், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் நா.பெரியசாமி கடலூரிலும், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன் நாகையிலும், மாநில செயலாளர் த.இந்திரஜித் திருச்சியிலும் ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு எடுத்துக்கூறி அழுத்தம் கொடுத்து, கர்நாடகத்திலிருந்து 15 டி.எம்.சி. தண்ணீர் பெறுவதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews