செய்திகள்

அதிவேக விரைவு ரெயில்கள் தாமதமானால் கூடுதல் வரியை திருப்பியளிக்க வேண்டும்: சி.ஏ.ஜி. பரிந்துரை

அதிவேக விரைவு ரெயில்கள் தாமதமானால் பயணிகளிடம் வசூலிக்கும் கூடுதல் வரியை திருப்பியளிக்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு சி.ஏ.ஜி. பரிந்துரை செய்துள்ளது.

மாலை மலர்

இந்தியன் ரெயில்வே சார்பில் சதாப்தி போன்ற அதிவேக விரைவு ரெயில்கள், விரைவு ரெயில்கள், மெயில், புறநகர் மின்சார ரெயில்கள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. எனவேதான், பயணிகள் தங்களின் பயணங்களுக்கு ரெயில்களில் செல்வதற்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, அதிவேக விரைவு ரெயிலகள் தாமதமானால் பயணிகளிடம் வசூலிக்கும் கூடுதல் வரியை திருப்பியளிக்க வேண்டும் என
நாடாளுமன்றத்தில் கணக்கு தணிக்கையாளர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வடக்கு மத்திய ரெயில்வே மற்றும் தெற்கு மத்திய ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் அதிவேக விரைவு ரெயில்கள் தினமும் தாமதமாக புறப்பட்டு செல்கிறது. தாமதமாக வந்து சேருகிறது. இதற்காக ஒரு புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. அதில், மொத்தம் 16 ஆயிரத்து 804 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 5 ஆயிரத்து 599 நாட்கள் அதிவேக விரைவு ரெயில்கள் தாமதமாக வந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஆக்ரா கண்ட் விரைவு ரெயில் (வண்டி எண்:12319) கொல்கத்தாவில் இருந்து 95 சதவீதம் தாமதமாகவே புறப்பட்டு சென்றுள்ளதும், ஜெய்ப்பூர்-அலகாபாத் விரைவு ரெயில் (வண்டி எண்:12404) 68 சதவீதம் தாமதமாகவே சென்றடைகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், இதுபோன்ற அதிவேக விரைவு ரெயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகளிடம் 11.17 கோடி ரூபாய் கூடுதல் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் அதிவேக விரைவு ரெயில்கள் தாமதமானால் பயணிகளிடம் வசூலிக்கும் கூடுதல் வரியை ரெயில்வே நிர்வாகத்தினர் திருப்பிச் செலுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். இதுதொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.