செய்திகள்

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது- அதிகாரி தகவல்

ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரி தெரிவித்தார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. சென்னைக்கு புழல் ஏரி, செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் மூலம் குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகருக்கு தினமும் 650 மில்லியன் கனஅடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கோடை வெயிலால் சென்னைக்கு குடிநீர் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளது.

4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 4850 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு தற்போது உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 1464 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னைக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வராது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட 4 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு தேவையான அளவு இருக்கிறது. கோடை வெயிலால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை. தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும்.

4 ஏரிகளிலும் மொத்தம் 4,850 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி திட்டத்தின் கீழ் 80 கனஅடி தினமும் வந்து கொண்டுள்ளது. வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தினசரி 200 மில்லியன் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு கோடை வெயிலால் சென்னைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குடிநீர் விநியோகம் சீராக நடை பெறும். மக்களுக்கு எந்த விதத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு வராது.

இவ்வாறு அவர் கூறினார்.