தென்காசி:
கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நெல்லை மாவட்டம் முழுவதும் வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் வந்ததால் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரித்தது.
கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கோடைமழை பெய்ய தொடங்கியது. கடந்த 3நாட்களாக மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்தது. நேற்றும் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
நெல்லை, பாளை, தென்காசி, சங்கரன்கோவில், சுரண்டை, ராதாபுரம், அம்பை, சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை கனமழை பெய்தது. அந்த இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய சாரல் மழை பெய்தபடியே இருந்தது.
குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. மெயினருவியில் சீசன் காலத்தில் கொட்டுவது போல் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. அதே போல் ஐந்தருவியில் 2 கிளைகளில் அதிகளவிலும் 3 கிளைகளில் குறைந்த அளவிலும் தண்ணீர் விழுகிறது.
ஆனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லை. ஒரு சிலரே அருவிகளில் குளிப்பதை காணமுடிந்தது. மேலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தென்காசியில் 52 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 15.4, ராதாபுரம் மற்றும் பாளையில் 7.2, சங்கரன்கோவில் மற்றும் சேரன்மகாதேவியில் 7, அம்பையில் 5.6, நெல்லையில் 5.3, சிவகிரியில் 4, செங்கோட்டையில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைப்பகுதியில் கொடுமுடியாறில் 20, கருப்பாநதியில் 20, குண்டாறில் 13, அடவிநயினாரில் 5, நம்பியாறு மற்றும் சேர்வலாறில் 3, மணிமுத்தாறு மற்றும் பாபநாசத்தில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகியிருந்தது.
நகரப்பகுதிகளில் மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு 28.02 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 50 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு 2.55 கனஅடியும் தண்ணீர் வரத்து உள்ளது.
கோடை மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது.