சூலூர்:
கோவையை அடுத்துள்ள சூலூர் காங்கயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி ராமாத்தாள்(வயது80).
இவர் ஈயம் பூசும் தொழில் செய்து வருகிறார். பாலுசாமியின் தங்கை சகுந்தலா(55). ராமாத்தாளுக்கும், சகுந்தலாவுக்கும் குடும்ப தகராறு இருந்துள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலையும் ராமாத்தாளுக்கும், சகுந்தலாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ராமாத்தாள் வீட்டில் ஈயம் பூசுவதற்கு வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்தார். பின்னர் அதனை சகுந்தலாவின் முகத்தில் வீசினார். இதில் சகுந்தலா மற்றும் அவரது அருகே நின்றிருந்த சக்திவேல்(28) என்ற வாலிபரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமாத்தாளை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.