செய்திகள்

சுல்தான்பேட்டை அருகே அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்- டிரைவர் கைது

சுல்தான்பேட்டை அருகே அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல். டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை வழியாக ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாடுகள் அதிக அளவில் ஏற்றிச் செல்லப்பட்டது. இதனை அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பைராகி கமல் ராஜ்ஜி பார்த்தார். பின்னர் சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் விரைந்து வந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை பிடித்தனர். லாரியை ஓட்டி வந்த சேலத்தை சேர்ந்த ராம் குமார்( வயது 38) என்பவரை மடக்கி பிடித்தனர். டிரைவர் மீது லாரியில் மாடுகளுக்கு தீவனம், தண்ணீர், இடவசதி இல்லாமல் ஏற்றிச் சென்றதாக வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் மாடுகளை மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews