செய்திகள்

எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்: ஸ்ரீநகரில் விமான சேவை பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

மாலை மலர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மற்றும் விமானப்படை தளம் அருகே எல்லைப் பாதுகாப்பு படையின் முகாம் உள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் தீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்த வீரர்கள், தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தினர். எல்லை பாதுகாப்பு படை வளாகத்தை விட்டு தீவிரவாதிகள் வெளியேற முடியாத வகையில், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

உள்ளே இருக்கும் தீவிரவாதிகள் அனைவரையும் முகாமின் ஒரு பக்கத்திற்கு விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரர்கள் தரப்பில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அருகில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டன. காலையில் செல்லவேண்டிய அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன. பாதுகாப்பு அனுமதி தொடர்பான மறு உத்தரவு வரும் வரை விமானங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பயணிகள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும், எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மற்றும் விமான நிலைய பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.  

தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளதால் கடந்த சில வாரங்களாக எல்லைப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.