ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி 
செய்திகள்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் திடீர் ஆய்வு

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருந்துகள் இருப்பு குறித்து நிலைய மருத்துவ அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஏராளமான வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக அதிகளவில் நோயாளிகள் வருகை இல்லாமல் உள்ளது. இருப்பினும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலை காரணம்காட்டி பெரும்பாலும் யாருக்கும் சிகிச்சை அளிப்பதில்லை என்பதால் மக்கள் அரசு ஆஸ்பத்திரியையே நாடி வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ பொருட்கள் இருப்பு குறித்து புகார் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்துகள் வெளியில் கொண்டு செல்லப்படுகிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து நேற்று பிற்பகலில் மருத்துவ மனை நிலைய அலுவலர் டாக்டர் மலையரசு திடீரென்று அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவசர சிகிச்சை பிரிவில் மருந்துகள், மருத்துவ பொருட்கள் வாங்கியது மற்றும் பயன்படுத்திய அளவு, மீதம் உள்ள இருப்பு ஆகியவை குறித்து எதுவும் பதிவு செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக கொரோனா காலம் என்பதால் குறைந்த அளவு நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் அதிகளவில் குளுகோஸ் ஏற்றும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.குறைவான நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் தேவைக்கு அதிகமாக வைத்திருந்தது நிலைய மருத்துவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மருந்துகள் வாங்கியது, இருப்பு குறித்தும் அதற்கான தேதி குறித்தும் பதிவு செய்து ஆவணங்கள் பராமரிக்க வேண்டும். கடந்த ஒருமாதமாக ஆவணங்கள் பராமரிக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக இதுதொடர்பான ஆவணங்களை முறையாக அவசர சிகிச்சை வார்டு பொறுப்பில் உள்ளவர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மருந்துகள் இருப்பு குறித்து நிலைய மருத்துவர் ஆய்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் உள்ளிட்டவை தனியார் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்துவதாக பரபரப்பு புகார் கூறப்பட்ட நிலையில் இந்த ஆய்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT