மாரடைப்பால் இறந்த ஜான்சன் 
செய்திகள்

குளித்தலை அருகே தேர்தல் பணியில் இருந்த போலீஸ்காரர் ‘திடீர்’ மரணம்

குளித்தலை அருகே இன்று அதிகாலை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

குளித்தலை:

கரூர் மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ராச் சாண்டார்திருமலை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வேலாயுதம்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் போலீஸ் ஏட்டாக இருக்கும் ஜான்சன் (வயது 45) என்பவரும் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சக போலீசார் அவரை மீட்டு காவல்காரன் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் ஜான்சன் பரிதாபமாக இறந்தார். மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்து விட்டதாக தெரிகிறது. அவரது உடல் குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்த ஜான்சனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நொச்சிக்காட்டுவலசு பகுதியாகும். அவருக்கு பிரிசில்லா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.