முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே 
செய்திகள்

பஸ், ரெயில்களில் இருக்கைகள் பாதியாக குறைப்பு - மராட்டிய அரசு அதிரடி

இடைவெளி விட்டு அமர்ந்து பயணம் செய்ய பஸ், ரெயில்களில் இருக்கைகள் பாதியாக குறைக்கப்படுவதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்களில் மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி பயணம் செய்தால் மும்பையில் மின்சார ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என அந்த மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மின்சார ரெயில்கள் மற்றும் பஸ்களை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு இருக்கையில் அமர்ந்து பயணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை அதிக அளவில் தடுக்க முடியும் என நம்புகிறோம்.

மும்பை நகரில் இயக்கப்படும் பெஸ்ட் பஸ்களில் எத்தனை இருக்கை உள்ளதோ, அத்தனை இருக்கைக்கான பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் நின்று செல்ல அனுமதி கிடையாது. 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். அதன்படி முதல்நாள் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மறுநாள் பணிக்கு வரமாட்டார்கள். இவ்வாறு சுழற்சி அடிப்படையில் அவர்கள் அலுவலகம் வந்து பணியாற்றுவார்கள். கொரோனா வைரஸ் அறிகுறியுடன் கையில் அழியாத மை முத்திரை குத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் பொது இடங்களுக்கு வந்தால், வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.