செய்திகள்

தொகுதிக்கு வெளியே வரவழைத்து அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா: மா.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை தொகுதிக்கு வெளியே வரவழைத்து அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக மா.சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை தொகுதிக்கு வெளியே வரவழைத்து அ.தி.மு.க.வினர் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 கோடியை பணப்பட்டுவாடா செய்துள்ளதாக பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி தென்சென்னை தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வினர் 1-ந்தேதியில் இருந்து வீடு வீடாக சென்று உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு வந்தோம். இதுதான் ஓட்டு கேட்கும் முறை.

ஆனால் அ.தி.மு.க.வின் 2 அணிகளும் அப்படி ஓட்டு கேட்கவில்லை. ஒரு தெருவில் உட்கார்ந்து கொண்டு 50 ஓட்டுக்கு ஒரு ஏஜெண்டை நியமித்து வீடு வீடாக ரே‌ஷன் கார்டு மற்றும் செல்போன் நம்பரை சேகரித்தனர். 1 வாரமாக இந்த வேலையைத்தான் செய்தனர். இதற்கு நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

இதேபோல் தினகரன் ஆட்கள் பெண் வாக்காளர்களை பிரசாரத்துக்கு அழைத்து தினமும் ரூ.300 கொடுத்து ஓட்டு கேட்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர்.

அ.தி.மு.க.வும், தினகரன் ஆட்களும் பிரதான சாலைகளில் வாகனத்தில் சென்று தான் பிரசாரம் செய்தார்கள். நடந்து செல்லவில்லை. சிறிய தெரு பகுதிகளுக்கும் செல்லவில்லை. அங்கெல்லாம் இவர்களது ஆட்கள் பணம் வினியோகம் செய்ய கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர்.

இதற்கு முன்பு வாக்காளர்களுக்கு இரவில்தான் பணம் கொடுப்பார்கள். அல்லது அதிகாலையில்தான் பணம் கொடுப்பார்கள்.

ஆனால் இந்த தேர்தலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீடு வீடாக பிரசாரம் செய்ய முடியும் என்பதால் அ.தி.மு.க.வினர் பகலிலேயே பணம் பட்டுவாடா செய்து விட்டனர். அதுவும் நேற்று காலை 11 மணியில் இருந்து பணம் கொடுத்து முடித்து விட்டனர்.

பெரும்பாலான வாக்காளர்களை தொகுதிக்கு வெளியே போன் செய்து வரவழைத்து ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் கொடுத்துள்ளனர். எனக்கு தெரிய 10 ஓட்டு உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூ.60 ஆயிரம் கொடுத்து உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வெளியே திருவொற்றியூர், எழும்பூர், ராயபுரம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க.வினர் நின்று கொண்டு குடும்பத் தலைவரை வரவழைத்து பணம் கொடுத்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் மெயின் வீதிகளில் உள்ளவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் கொடுக்கும்போதுதான் சிலர் பிடிபட்டுள்ளனர். மற்றவர்கள் தொகுதிக்கு வெளியே நின்று கொண்டு பணம் கொடுத்ததால் பிடிபடவில்லை.

நேற்று மட்டும் அ.தி.மு.க.வினர் 1½ லட்சம் ஓட்டுக்கு ரூ.90 கோடி கொடுத்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 70 சதவீதம் குறுகிய சந்து பகுதியாகும். இங்கு தேர்தல் அதிகாரிகள் காரில் வருவதில்லை. மெயின் ரோட்டில் மட்டும் வந்து செல்வதால் முறைகேடு. தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடைபெறுகிறது.

கடந்த தேர்தலின்போது ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததாக வருமான வரித் துறையினர் ஆவணங்களை கைப்பற்றியதன் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அரசியல்வாதிகள் யார் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் விளைவுதான் மீண்டும் ஆர்.கே.கரில் பணப்பட்டுவாடா செய்யும் அளவுக்கு அ.தி.மு.க. துணிந்துள்ளது.

போலீசார் நேற்று எந்த வாகனத்தையும் சோதனையிடாமல் விட்டு விட்டதால் மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு சென்று வினியோகம் செய்து விட்டனர். இது ஜனநாயகத்தை கேலிக்குறியாக்கும் மிகப்பெரிய மோசடியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.