கோப்பு படம் 
செய்திகள்

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் பலி

பல்லடம் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் யோகமுரளி (52). இவர் மங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை 6.45 மணியளவில் பணி தொடர்பாக பல்லடம் கோர்ட்டுக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மங்கலம் வந்து கொண்டு இருந்தார். பல்லடம் அருகே உள்ள 63 வேலம்பாளையம் செல்லும் போது மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் வந்தது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் யோகமுரளி திடீர் பிரேக் போட்டார்.

அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் யோகமுரளி இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பல்லடம் போலீசார் கூறும்போது, சப்-இன்ஸ்பெக்டர் யோகமுரளி கோர்ட்டுக்கு சென்று விட்டு மங்கலம் திரும்பும் போது நாய் குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனாலும் இறந்து விட்டார் என்றனர்.

விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் யோகமுரளிக்கு தேவி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

SCROLL FOR NEXT