செய்திகள்

ஆர்.கே.நகரில் துணை ராணுவம் குவிப்பு: பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை

ஆர்.கே.நகர் தொகுதியில் 108 துணை ராணுவ படையினர் சோதனை சாவடிகளில் கண்காணித்து வருகிறார்கள். பணப்பட்டு வாடாவை தடுக்க 18 பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதா மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத்தேர்தல், பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் பணப்பட்டு வாடா குற்றச்சாட்டு தொடர்பாக யார் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு வருகிற 21-ந்தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக்கோட்டுதயம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். ஆர்.கே.நகர் பிரசாரம் ‘களை’ கட்டியுள்ளது.

அனைத்துக் கட்சி தலைவர்களும், வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த 2 கட்சிகளுக்கும் தினகரன் கடும் சவாலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் பணப்பட்டுவாடா புகாரும் பூதாகரமாக எழுந்துள்ளது.

கடந்த முறை பண மழை பொழிந்தது போல இந்த தேர்தலிலும் பணப்பட்டு வாடா நடந்து விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் தீவிரமாக களம் இறங்கியது. ஆனால் அதையெல்லாம் மீறி அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பல வழிகளில் பணப்பட்டு வாடா செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக பல குழுக்களாக பிரிந்து வாக்காளர்களின் பெயர் விவரங்களை சேக ரித்து பின்னர் வெளியிடங்களுக்கு வரவழைத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

இதற்காக படித்த பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பணப்பட்டுவாடாவை கச்சிதமாக செய்யும் பெண்களுக்கு கமி‌ஷன் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் பணப்பட்டு வாடாவை தடுக்க கூட்டாக களம் இறங்கி உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பணப்பட்டு வாடாவை தடுக்க 18 பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 18 பறக்கும் படையினர் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.

வீடியோ கேமராவுடன் சுற்றி வரும் இந்த பறக்கும் படையினர் வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது பற்றி தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த பறக்கும் படையில் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் இடம் பெற்றுள்ளனர்.

பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் விதிமீறல்களை தடுப்பதற்காக 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் தலா 3 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் 12 சோதனை சாவடிகளில் ஒரு நேரத்தில் 36 பேர் பணியில் உள்ளனர். நேற்று இரவு 12 மணியில் இருந்து இவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

சோதனை சாவடிகளில் பணி புரிபவர்கள் 3 ஷிப்டுகளாக பிரிந்து காவல் பணியில் ஈடுபடுகிறார்கள். மொத்தம் 108 துணை ராணுவ படையினர் சோதனை சாவடிகளில் கண்காணித்து வருகிறார்கள். இவர்கள் தவிர போலீசாரும் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து ரோந்து சுற்றி வருகிறார்கள்.

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் ஜெயராம் தலைமையிலான போலீசார் 24 மணி நேரமும் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

36 நான்கு சக்கர வாகனங்களும், 25 மோட்டார் சைக்கிள்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அனுமதியின்றி தொகுதிக்குள் நுழைந்த 52 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு தண்டையார்பேட்டை அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி தொகுதிக்குள் புகுந்த 52 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வரும் நாட் களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 252 வாக்குச்சாவடிகளுமே பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு பணிகளும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.