சென்னை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2019-ம் ஆண்டுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்தில் உள்ள 32 தேர்வு மையங்களில் வருகிற 11-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த தேர்வு 13-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்கள் தவிர்த்து மற்ற விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் எழுத்து தேர்வு நடைபெறும்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலைப்பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெறும் எழுத்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.