செய்திகள்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஊக்கமருந்து தடையில் இருந்து திரும்பிய ஷரபோவா 15 மாதங்களுக்குப் பிறகு தனது முதல் தொடரிலேயே அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

சுமார் 15 மாதங்கள் கழித்து தற்போது ஸ்டட்கார்ட் ஓபனில் களமிறங்கியுள்ளார். இந்த தொடரை நடத்துபவர்கள் ஷரபோவாவிற்கு ‘வைல்டுகார்டு’ அளித்தனர். இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் வைல்டு கார்டு சிறப்புடன் களம் இறங்கிய ஷரபோவா முதல் சுற்று ஆட்டத்தில் வின்சியை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-3 என வெற்றி பெற்று முத்திரை பதித்தார். 2-வது சுற்றில் சக நாட்டு வீராங்கனையான எகாடெரினா மகரோவாவை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற்ற காலிறுதியில் ஷரபோவா, எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்டை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-3, 6-4 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 15 மாதங்களுக்குப் பின் களமிறங்கிய ஷரபோவா, தனது முதல் மூன்று ஆட்டத்தில் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.