விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களுடன், உடற்கல்வி ஆசிரியர் காட்வின் 
செய்திகள்

நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று ஆசிரியர் விருந்து கொடுத்தார். #MaduraiTeacher

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் காட்வின் வேத நாயகம் ராஜ்குமார் (வயது 45). இவர் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை நீச்சல், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க வைத்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான நீச்சல்குளத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தன. இதில் இந்தப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்குசாமி (9-ம் வகுப்பு), தீபன்ராஜ் (10-ம் வகுப்பு), முத்து கணபதி (பிளஸ்-1), முகேஷ்குமார் (பிளஸ்-2) ஆகியோர் 2 பிரிவுகளில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

முன்னதாக இந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர் காட்வின், போட்டியில் பதக்கம் பெற்றால் விமானத்தில் அழைத்துச் செல்வதாக உறுதி கூறியிருந்தார்.

அதன் பேரில் வெற்றி பெற்ற 4 மாணவர்களையும், ஆசிரியர் காட்வின் தனது சொந்த செலவில் கடந்த 30-ந் தேதி காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றார். முதன் முறையாக விமானத்தில் சென்ற கிராமப்புற மாணவர்கள் பூரிப்பு அடைந்தனர்.

சென்னையில் 4 மாணவர்களுக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை ஆசிரியர் காட்வின் சுற்றிக்காண்பித்து விருந்து கொடுத்தார்.

பின்னர் அன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மதுரைக்கு புறப்பட்டு வந்தனர். இது குறித்து ஆசிரியர் காட்வின் கூறுகையில், நான் 40 வயதுக்கு மேல் தான் விமான பயணம் செய்துள்ளேன். கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக போட்டியில் வெற்றி பெற்றால் விமானத்தில் அழைத்துச் செல்வதாக ஊக்கப்படுத்தினேன்.

அதன்படி அவர்களும் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்றனர். அடுத்த முறையும் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தால் தொடர்ந்து விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்வேன் என்றார். #MaduraiTeacher