சென்னை:
சென்னையில் டெங்கு நோய் பீதி மேலோங்கிய நிலையில் மக்கள் பீதியை போக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மோசமாக உள்ளதாக மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மெத்தனப்போக்குடன் மாநகராட்சி செயல்படுவதாக கூறி மாணவர் அமைப்புகள் சார்பில் மாநகராட்சியை பிணமாக சித்தரித்து, அதை பாடை கட்டி ஊர்வலம் நடத்தும் நூதன போராட்டத்தை மாணவர் அமைப்பினர் நடத்தினர்.
மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே நேற்று நடந்த இந்த போராட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் எதுவும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் மோசமாக இருந்தது என்றும் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டி, ‘சென்னை மாநகராட்சி’ எனும் பெயர்ப்பலகை மாட்டிய ஒருவரை பாடையில் ஏற்றி, அவரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒப்பாரி வைத்து அழுதனர்.
இந்த நூதன போராட்டம் குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தேவி, வெங்கடேஷ், ராமசாமி ஆகியோர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. ஆனால் டெங்குவை கட்டுப்படுத்துகிறோம், தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று சுகாதாரத்துறை பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் சுகாதாரம் சீரழிந்து இருக்கிறது. துப்புரவு-சுகாதார பணியாளர்கள் தங்கள் பணிகளை முறையாக செய்வது இல்லை. இந்த சமயத்தில் கூட மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பெயருக்கு ஆங்காங்கே பணிகள் நடக்கின்றன. அப்படி நடக்கும் பணிகளும் மோசமாகத்தான் இருக்கின்றன. குப்பைகளும், கொசுக்களும் ஒழிந்தபாடில்லை. நோய் தாக்கமும் குறைந்தபாடில்லை.
டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம்? என்பதிலேயே அரசின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கிறது. உயிரிழப்பவர்களை கூட மர்ம காய்ச்சல் எண்ணிக்கையில் சேர்த்து விடுகிறார்கள். மாநிலத்தின் தலைநகரிலேயே இப்படி என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை எப்படி இருக்கும்? எனவே தான் ஒன்றுக்கும் உதவாத இந்த மாநகராட்சியை கொலை செய்து பாடையில் ஏற்றியிருக்கிறோம். இனியாவது மக்கள் நலனில் மாநகராட்சி அக்கறை எடுத்து, உரிய நடவடிக்கைகளில் பணியாளர்களை உடனே ஈடுபடுத்தவேண்டும். அதை வலியுறுத்தியே இந்த போராட்டத்தை மேற்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.