லக்னோ:
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடந்த 1999 ஆம் ஆண்டில் கார்கில் போரை நடத்தி பெரும் வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி விஜய் திவாஸ் என்ற பெயரில் கார்கிலில் பெற்ற வெற்றியை கொண்டாடி வருகிறது.
இன்று கார்கில் விஜய் திவாஸ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உத்திரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் விஜய் திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாநில ஆளுனர் ராம் நாயக்கும் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது முதல்-மந்திரி பேசுகையில், ‘இப்போதைய கல்வி முறையால் மிகுந்த மன உளைச்சலில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தேசப்பற்றின் பக்கம் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிக்கு, கார்கில் போரில் பலியான பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் மனோஜ் பாண்டே பெயர் வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து தரும் எனவும் உறுதி அளித்துள்ளார்.