செய்திகள்

ஆன்லைன் விண்ணப்ப பதிவு எளிதாக உள்ளது - மாணவிகள் பேட்டி

பொறியியல் படிப்புகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்வது மிக எளிதாக இருந்தது. இது ஒரு புது அனுபவம் என்றாலும் கஷ்டம் எதுவும் இல்லாமல் விண்ணப்பிக்க முடிந்ததாக மாணவ-மாணவிகள் கூறினர்.

ஆன்லைனில் பதிவு செய்வதற்கு 3 பெரிய ஹால் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் 200 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில் 200 பேர் பதிவு செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு வழி காட்டவும் உதவி செய்யவும் அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மாணவர்கள் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள். அதன்படி விரைவாக விண்ணப்பித்தனர்.

ஒரு மாணவர் விண்ணப்பிக்க 20 நிமிடங்கள் வரை ஆகிறது. விண்ணப்ப படிவத்தினை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புவதை விட இந்த முறை மிக எளிதாக இருந்தாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு என்பவரின் மகன் விக்னேஷ் ஆன்லைன் விண்ணப்பம் குறித்து கூறியதாவது:-

ஆன்லைன் புதிய முறை மிக எளிதாக இருந்தது. எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் விவரங்களை பதிவு செய்தேன். இது ஒரு புது அனுபவம் என்றாலும் கஷ்டம் எதுவும் இல்லாமல் விண்ணப்பிக்க முடிந்தது.

பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள். எளிய நடைமுறையில் இருப்பதால் கிராமப்புற மாணவர்களும் எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின் செல்போனுக்கு விண்ணப்பம் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் வருகிறது. என்றார்.

விக்னேஷின் தந்தை பாபு கூறும்போது, “நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். என் மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இருவரின் வருமானத்தை கொண்டு மகனை எப்படியாவது பி.டெக் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

மனைவி வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர்கள் படிப்பதற்கு உதவி செய்வதாக கூறி இருக்கிறார்கள். அவர்களின் உதவியுடன் மகனை படிக்க வைக்கிறோம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதற்கு ரொக்கப் பணம் கொண்டு வந்தேன். ஆனால் அதனை ஏற்கவில்லை. டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம்தான் செலுத்த வேண்டும் என்று கூறியதால் தடுமாறி விட்டேன். என்னிடம் எந்த கார்டும் கிடையாது. அதனால் உறவினரை வரவழைத்து அவரின் கார்டு மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினேன் என்றார்.

மாணவி ஆர்த்தி (சோழிங்கநல்லூர்):-

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை எளிதாக உள்ளது. மாணவர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. சரியான வழிகாட்டுதலுடன் பின்பற்றினால் எந்த குழப்பமும் அடைய தேவையில்லை.

மாணவர்களுக்கு ஊழியர்கள் உதவி செய்வதால் தடுமாற்றம் இல்லாமல் விண்ணப்பிக்க முடிந்தது. என்னை பொறுத்தவரை ‘ஆப்லைன்’ முறையை விட ஆன்லைன் பதிவு முறை எளிது, காலவிரயம் தடுக்கப்படுகிறது. கலந்தாய்வும் ஆன்லைனில் நடத்தப்படுவதை வரவேற்கிறேன்.

காயத்திரி:- ஆன்லைன் பதிவு முறையில் கேட்கப்படும் தகவல்களை முறையாக பதிவு செய்ய உதவி மையத்தில் ஊழியர்கள் வழி காட்டுகிறார்கள். புதிதாக இணைய தள முகவரியை தொடங்கி அதன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் விண்ணப்பம் ஏற்பு குறித்த தகவல் செல்போனுக்கு வருகிறது. ஆன்லைன் முறை கஷ்டம் இல்லாமல் எளிதாக இருந்தது.