போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரசினர் தொடக்கப் பள்ளி. இங்கு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் ஒற்றை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கைலாஷ் சந்திரா. தொடக்கப் பள்ளிக்கென சொந்த கட்டிடம் இல்லாததால், வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாணவர்களுக்கு அந்த கட்டிடத்தில் உள்ள கழிப்பறையில் கைலாஷ் சந்திரா பாடம் எடுத்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதுகுறித்து கல்வித்துறை மந்திரி விஜய் ஷா கூறுகையில், ’’மாநிலத்தில் 1.25 லட்சம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு முக்கிய பகுதிகளில் பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் வாடகை கட்டிடத்தில் பள்ளிகள் இயங்குகின்றன.
குறிப்பிட்ட பகுதியில் தொடக்கப் பள்ளிக்கான கட்டிடம் கட்டப்படவில்லை. இது குறித்து கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். வாடகை கட்டிடத்தில் அந்த பள்ளி செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட அதிகாரிகளிடம் இதுதொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம். இதன்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் யாரையும் கழிப்பறையில் பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை’’ என தெரிவித்துள்ளார்.