செய்திகள்

பெங்களூரு: மோடி பொதுக்கூட்டம் அருகே ‘பக்கோடா’ விற்ற பட்டதாரிகள்

கர்நாடகம் மாநிலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தின் அருகில் பட்டதாரிகள் சிலர் ‘பக்கோடா’ விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #graduates #bokoda #modi

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, ஆளும் கட்சியான காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பா.ஜ.க.வும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று மாலை பெங்களூரு வருகை தந்தார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார்.

முன்னதாக, மோடி பங்கேற்ற கூட்டத்துக்கு சிறிது தூரத்தில் சில மாணவர்கள் பட்டதாரி உடை அணிந்தபடி திரண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் இருந்த தட்டுகளில் உள்ள பக்கோடாவை விற்க ஆரம்பித்தனர்.

‘மோடி பக்கோடா’, ‘அமித்ஷா பக்கோடா’ மற்றும் ‘டாக்டர் யெட்டி பக்கோடா’ என கூவிக்கூவி விற்றனர். அவர்கள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினரிடம் பக்கோடாவை விற்றுக் கொண்டிருந்தனர். இதைக் கண்டதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி சமீபத்தில் பேட்டியளிக்கையில், ஒரு இளைஞர் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதித்தாலும் அவரும் ஒரு தொழிலதிபர் தான் என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் கருத்தை கிண்டலடிக்கும் வகையில் பட்டதாரி இளைஞர்கள் சிலர் பிரதமர் கூட்டம் நடக்கும் இடத்தில் பக்கோடா விற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. #graduates #bokoda #modi #tamilnews