செய்திகள்

ரெயில் தாமதத்தால் 600 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத முடியவில்லை- மீண்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை

பெங்களூருவுக்கு ரெயில் தாமதமாக வந்ததால், நீட் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கோரி பிரதமருக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #NEET #NEETExam

பெங்களூரு:

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதற்காக கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, தார்வார், பெலகாவி, தாவணகெரே, மங்களூரு, உடுப்பி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பெங்களூருவில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்காக பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 600 மாணவ-மாணவிகள் பல்லாரி நகரில் இருந்து ஹம்பி ரெயிலில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புறப்படவேண்டிய அந்த ரெயில் 4 மணி நேரம் தாமதமாக இரவு 2 மணிக்குத்தான் அங்கிருந்து கிளம்பியது. இருப்பினும் அந்த ரெயிலில் மாணவ-மாணவிகள் பயணித்தனர்.

அந்த ரெயில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது சிக்னல் கிடைக்காமல் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகுதான் ரெயில் அங்கிருந்து கிளம்பியது.

நேற்று மதியம் ஒரு மணியளவில்தான் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள், ரெயிலில் இருந்து இறங்கினர்.

பின்னர் அவர்கள் ரெயிலை சிறைபிடித்து என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாணவ-மாணவிகளும் அவர்களுடன் வந்த பெற்றோரும் பின்னர் அங்கிருந்து பஸ்கள், கார்கள் மூலம் அவசர, அவசரமாக பெங்களூருவுக்கு வந்தனர். இருப்பினும் அவர்களால் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடியவில்லை. இதன் காரணமாக மாணவ-மாணவிகளால் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள் தேம்பி, தேம்பி கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் சோகத்துடன் பெங்களூருவில் இருந்து தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதில் தேர்வு எழுத முடியாத சில மாணவ-மாணவிகள் தங்களுடைய நிலை குறித்து, மத்திய ரெயில்வே மந்திரிக்கு டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் தாங்கள் மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வட கர்நாடகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெங்களூருவில் நடந்த நீட் தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டு உள்ளனர். ஹம்பி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக வந்ததுதான் இதற்கு காரணம். இந்த விஷயத்தில் பிரதமர், ரெயில்வே மந்திரி ஆகியோர் தலையிட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

ரெயில் தாமதமாக வந்ததால் 600 பேர் நீட் தேர்வு எழுத முடியாமல் திரும்பிய சம்பவத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஹம்பி ரெயில் காலதாமதம் குறித்து ரெயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பல்லாரி-பெங்களூரு பாதையில் தர்மாவரம் பகுதியில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில் பெங்களூரு சென்றடைய தாமதமாகும் என்று முன்கூட்டியே அனைத்து பயணிகளுக்கும் தகவல் தெரிவித்துவிக்கப்பட்டதாகவும், இதனால் தங்கள் தரப்பில் இருந்து எந்த தவறும் நடக்கவில்லை என்றும், ரெயில் தாமதத்திற்கு ரெயில்வே துறை காரணம் அல்ல” என்றும் கூறப்பட்டு உள்ளது. #NEET #NEETExam