கோப்பு படம் 
செய்திகள்

கே.கே.நகரில் பஸ் டிரைவரை தாக்கிய 3 மாணவர்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்

கே.கே.நகரில் பஸ் டிரைவரை தாக்கியது தொடர்பாக 3 மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மாலை மலர்

போரூர்:

சென்னை கே.கே. நகரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு நேற்று மாலை எண். 12-ஜி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மனோகரன் ஓட்டினார்.

கே.கே. நகர் காமராஜர் சாலையில் பஸ் வந்தபோது படிக்கட்டில் மாணவர்கள் 2 பேர் நின்று கொண்டு வந்தனர். அவர்களை டிரைவர் மனோகரன் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தனது நண்பர்கள் 2 பேரை போன் செய்து அங்கு வரவழைத்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் மாணவர்களுடன் சேர்ந்து டிரைவர் மனோகரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் மற்ற பஸ் டிரைவர்கள் கே.கே. நகர் டெப்போவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து அதனை வைத்து 4 பேரை பிடித்தனர். அவர்கள் அனைவரும் கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதில் 3 பேர் தி.நகரில் உள்ள பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் ஆவர். மாணவர்களின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்து பஸ் டிரைவர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்த மாணவர்களிடம் பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு மாணவர்களை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.