செய்திகள்

ஒடிசாவில் புளூ வேல் விபரீதத்திற்கு பலியாக இருந்த மாணவன் மீட்பு

ஒடிசாவில் புளூ வேல் விளையாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மாணவனை மீட்டு மனநல ஆலோசனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மாலை மலர்

புவனேஷ்வர்:

சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ (நீலத்திமிங்கலம்) என்ற இணைய தள விளையாட்டு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் ‘50’ சவால்கள் அளிக்கப்படுகிறது.

ரெயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. 50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் புளூ வேல் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் ஜேல்ஸ்வர் பகுதியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவன் இந்த விபரீத விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது.

மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக அவனது நண்பர்கள் கல்லூரி முதல்வருக்கு தகவல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவன் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது நண்பர்கள் சிலரிடம் இந்த விளையாட்டு குறித்து கேட்டுள்ளான். ஆனால் உடல் ரீதியாக எந்த காயங்களும் இல்லை. அந்த மாணவனை மீட்டு மனநல ஆலோசனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.