செய்திகள்

லத்தேரி அருகே மாணவர் கொலையில் உடன் சென்ற மாணவர் கைது

லத்தேரி அருகே மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற மாணவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

வேலூர்:

பள்ளிகொண்டா அடுத்த வேப்பங்கால் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 13). பொய்கை பிள்ளையார் குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தான். நேற்றுமுன்தினம் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் சந்தோஷ் மாலையில் வீடுதிரும்பவில்லை.

லப்பை கிருஷ்ணாவரம் அருகே மாணவனை கொலை செய்து கால்வாயில் வீசி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக லத்தேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

செல்போன் தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. கொலைசெய்யப்பட்ட சந்தோஷ் தனது செல்போனை, தன்னுடன் படிக்கும் சோழமூர் ராமாவரம் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கு விற்றுள்ளான். அதில் அந்த மாணவன் இன்னும் ரூ.500 கொடுக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 500 ரூபாயை சந்தோஷ் அடிக்கடி கேட்டுள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் பணத்தை கேட்டுள்ளான். அதற்கு அந்த மாணவன் வீட்டுக்கு சென்று வாங்கித்தருவதாகக்கூறி சந்தோஷை அழைத்து சென்றுள்ளான். லப்பை கிருஷ்ணாவரம் அருகே சென்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு கிடந்த கட்டையால் சந்தோஷை, அந்த மாணவன் தாக்கி உள்ளான். இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டான். உடனே அங்குள்ள கால்வாயில் உடலை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

சந்தோஷை தாக்கிய மாணவனின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு மாணவன் உள்பட வீட்டில் உள்ள அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

அவர்கள் குடும்பத்துடன் ஓசூருக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை தேடி தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசுடன் படித்த மற்றொரு மாணவனிடம் விசாரணை நடத்தினர்.

அந்த மாணவர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த போது அவன் உடனிருந்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.