செய்திகள்

துறையூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி

துறையூர் அருகே இன்று அதிகாலை மர்ம காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் பலியாகி உள்ளார்.

துறையூர்:

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு தினமும் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, மாநகராட்சி நிர்வாகம் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்காமல் இருந்தால் அவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறது.

இந்தநிலையில் துறையூர் அருகே இன்று அதிகாலை மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி ஒருவர் பலியாகி உள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பொன்னம்பலம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், கூலித்தொழிலாளி. இவரது மகள் சுவேதா. (வயது 10). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவேதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை பொன்னம்பலம்பட்டி அருகே வீரமச்சான்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதா நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சுவேதாவுக்கு குணமாகவில்லை.

எனவே மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுவேதா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் பொன்னம்பலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.