விசாரணை 
செய்திகள்

மதுரை அருகே மாணவர் மர்ம மரணம்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரிடம் கோட்டாட்சியர் விசாரணை

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

மாலை மலர்

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் சாப்டூர் அருகே உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் வாழைத்தோப்பு என்னும் இடத்தில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள்.

இதில் மூத்த மகன் இதயக்கனி அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று விட்டார். இது குறித்து அந்தப்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயக்கனியின் சகோதரன் ரமேசை (வயது 22) கடந்த 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். ரமேஷ் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரமேசின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்களும், கிராம மக்களும் உடலை எடுக்க விடாமல் மறியல் செய்ததை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன் மற்றும் 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன், போலீஸ்காரர் புதியராஜா ஆகிய 2 பேரும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முன்பு விசாரணைக்காக ஆஜர் ஆனார்கள்.

அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தார். இந்த சம்பவத்தில் அடுத்தகட்டமாக மேலும் 2 போலீஸ்காரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.