மர்ம காய்ச்சலுக்கு பலியான மாணவன் யுவராஜ், 1 வயது குழந்தை ஸ்ரீராம். 
செய்திகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவன்-குழந்தை பலி

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள எமக்கலாபுரம் கைலாசம்பட்டி காலனியைச் சேர்ந்த மணிமல்லான். அவரது மகன் யுவராஜ் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக யுவராஜூக்கு காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று காலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தான்.

ரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்து விட்டு மருந்து மாத்திரைகள் வாங்கி வீட்டுக்கு சென்றான். மாலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான்.

அங்கு யுவராஜின் நிலை மோசமடையவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனது மனைவி மற்றும் ஸ்ரீராம் என்ற 1 வயது ஆண் குழந்தையுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட திண்டுக்கல் அருகே உள்ள அழகுபட்டி கிராமம் தெப்பக்குளத்துப்பட்டிக்கு வந்தார்.

நேற்று இரவு ஸ்ரீராமுக்கு அதிக காய்ச்சலுடன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சையின் போதே ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தான். இறந்து போன 2 பேருக்கும் என்ன காய்ச்சல் என்பதை தெரிவிக்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.