பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 
செய்திகள்

பேரணாம்பட்டில் அடிப்படை வசதி கேட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

பேரணாம்பட்டில் அடிப்படை வசதி கேட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு நெடுஞ்சாலையை ஒட்டி அரசினர் ஆதிதிராவிடர் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 286 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்காகவும், இயற்கை உபாதைக்காகவும் பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

இதுகுறித்து ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆந்திரமடைந்த முன்னால் ஆசிரியர் சவுந்திர பாண்டியன், அ.தி.மு.க. நகர துணை தலைவர் சிவாஜி, நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் நாகராஜன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி முனிரத்தினம் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி முன்பாக திரண்டனர்

பள்ளிக்கு வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி பள்ளியின் கேட்டுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியை கலைவாணி, பேரணாம்பட்டு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என கூறினர். இதனை ஏற்காத பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக புகார் அளித்தும் அதிகாரிகள் மெத்தன போக்காக இருந்து விட்டனர்.

எனவே ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாணவர்களும் பள்ளிக்கு செல்லாமல் வெளியிலேயே காத்திருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.