சென்னை அடுத்துள்ள திருவிடந்தையில் பிரமாண்டமான ராணுவ கண்காட்சி இன்று தொடங்கியது. ரூ.800 கோடி செலவில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பங்கேற்கிறார். ராணுவ தளவாட அரங்குகளை அவர் திறந்து வைக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாகி உள்ள நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன.
இதன்படி பிரதமர் மோடி நாளை சென்னை வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சென்னையில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை காலை டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வரும் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராணுவ கண்காட்சி நடைபெறும் இடத்துக்கு செல்கிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்தும் ஹெலிகாப்டரில் கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அருகில் உள்ள அடையாறு புற்று நோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து புற்று நோய் மையத்துக்கு மட்டுமே அவர் காரில் செல்கிறார்.
இருப்பினும் திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடைபெறும் பகுதி சுற்றியுள்ள சாலைகள், அடையாறு புற்றுநோய் மையத்தை சுற்றியுள்ள சாலைகள் போலீசாரின் முழுகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி 4 ஹெலிகாப்டர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த 4 ஹெலிகாப்டர்களும் சென்னை வந்தடைந்தன. பழைய விமான நிலையத்தில் அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து கூடுதல் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி. சர்மா தலைமையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சென்னை வந்தனர். அதில் 60 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடைபெறும் இடம், அடையாறு புற்றுநோய் மருத்துவ மையம் ஆகிய இடங்களில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் வருகையை யொட்டி சென்னை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி நாளை தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும்வரையில் டெல்லி பாதுகாப்பு அதிகாரிகளும் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையே இன்று காலை 9 மணிக்கு கண்காட்சி வர்த்தக பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து சர்வ தேச பாதுகாப்புகள் பற்றிய கருத்தரங்கம் மற்றும் முப்படை ராணுவ வீரர்களின் சாகசமும் நடைபெற இருப்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சிக்கான வாகன அனுமதி சீட்டு இல்லாத எந்த வாகனங்களையும், அடையாள அட்டை இல்லாத நபர்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அது போன்ற வாகனங்கள் ஓ.எம்.ஆர். சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் அமைப்பினர் சிலர் கடல் வழியாக படகில் சென்று கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து கடல் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவிடந்தை பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி அங்கு மறைந்திருந்து மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது திடீர் என கருப்பு பலூன்களை பறக்கவிட்டு சாலை மறியலில் ஈடுபட சிலர் முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
திருவிடந்தை பகுதியில் பஸ் நிறுத்தங்களில் கூடுதலாக அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.