ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி அலுமேலு (வயது35). இவர் 37 செம்மறி ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைத்து வந்துள்ளார். ஆட்டு கொட்டகை வீட்டின் அருகே அமைத்து பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுஞாயிற்றுக்கிழமை இரவு ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டில் உறங்க சென்றுள்ளார். இரவு நேரத்தில் தெருநாய்கள் கீற்று கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளது.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது 17 ஆடுகளுக்கு உடலில் கழுத்து, வயிறு போன்ற பகுதிகளில் கடித்து குடல்கள் வெளியே வந்த நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தது. மேலும் 20 ஆடுகள் சிறிய காயங்களுடன் உயிர்தப்பியது.
இதுகுறித்து உடனடியாக ஊத்தங்கரை கால்நடை மருத்து வருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மகேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆடுகளை தெரு நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.
ஆடுகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வந்த அலுமேலு குடும்பத்தார், ஆடுகள் இறந்ததை கண்டு கதறிய காட்சி, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழக அரசு இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.