தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராகவும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஹென்றி தாமஸ் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதாகவும், 8-4-2018 அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கிவிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தும்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும், கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், தற்போது அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியானது மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதன்பிறகும் ஆலை இயங்குவதால் போராட இருப்பதாக மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.