செய்திகள்

சேலத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை: அமைச்சர் கடம்பூர் ராஜு

சேலத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைப்பதற்கு, மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்று இடத்தை பெற்றுத் தருகின்ற நேரத்தில், உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பதில் வருமாறு:-

அம்மா ஆட்சி நடைபெற்ற நேரத்திலேயே, இரண்டு அமைச்சர்களை அனுப்பி, நெல்லை மாவட்டத்தில் நெற்கட்டுச்சாவல் என்ற இடத்தில் பூலித்தேவன் விழாவினை மாவட்டத்தில் அரசு விழாவாக நடத்தச் சொன்னார்.

இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும், இந்த விழா அரசு விழாவாக நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று முறையான அறிவிப்போடு நடவடிக்கை எடுக்கப்படும்.

நெற்கட்டுச்சேவலில் தான், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி ஆண்டுதோறும், அரசு விழாவாக, சென்ற ஆண்டிலே சட்டப்பேரவை தலைவர்களை அனுப்பி அந்த விழாவினை அரசு விழா என்று அறிவித்து சிறப்பித்தவர் அம்மா . உறுப்பினர் பாளையங் கோட்டையில் உள்ள அந்த இல்லத்தில் நினைவு சின்னம் தொடர்பான அறிவிப்புகளை செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். நிச்சயமாக அரசு கனிவுடன் பரிசீலித்து ஆவன செய்யும்.

கவிஞர் சோமசுந்தர பாரதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், அரசு விழா நடத்த துறையின் மூலமாக ஆய்வு செய்து, நிச்சயமாக அவருடைய வரலாற்றை அறிந்து, அதற்குண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில், புரட்சிக்கவிஞர் பாரதியாரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்தி, பாரதியாருக்கு மணிமண்டபம் அமைத்து அங்கே உமறுப் புலவருக்கும் அரசின் சார்பாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அரசு விழாவாக அறிவிக்க உறுப்பினரின் கோரிக்கையை இந்த அரசு கனிவோடு பரிசீலிக்கும்.

மேலும், காயிதே மில்லத் மணிமண்டபம் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்கள் பார்வைக்காக நாள்தோறும் திறந்து வைக்கப்படுகிறது. 1916-ம் ஆண்டு முதல், ரம்ஜான் தொழுகை குறித்த நிகழ்ச்சி, பயிற்சி முகாம் போன்றவை பெருநாள் தொழுகை, மற்றும் சிறப்புத் தொழுகை போன்ற 13 நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மதுரையில் துவக்கி, தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது. சேலத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைப்பதற்கு, அங்கே மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்று இடத்தை பெற்றுத் தருகின்ற நேரத்தில், உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.