செய்திகள்

சிலை கடத்தல் வழக்கில் டி.எஸ்.பி. காதர்பாஷா சிக்கினார்?

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய டி.எஸ்.பி. காதர்பாஷா, சிலை கடத்தல் வழக்கில் போலீசில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இருந்து பழைமையான ஐம்பொன் சிலைகளை கடத்தி வெளி நாடுகளுக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கும்பல் பல ஆண்டுகளாகவே கைவரிசை காட்டி வருகிறது.

அரிய பொக்கி‌ஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த சிலைகளுக்கு வெளி நாடுகளில் மவுசு அதிகம். இங்கு சில லட்சங்களில் விலை பேசப்படும் சாமி சிலைகள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்பனையாகிறது. சர்வதேச அளவில் பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து சிலை கடத்தல் கும்பல் செயல்படுவது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அம்பலமானது.

கிண்டியில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் சிலை கடத்தலை தடுப்பதற்கு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. சிலை மற்றும் கடத்தல் பிரிவு ஐ.ஜி.யாக பொன்மாணிக்கவேல் பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன. சர்வதேச கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த இவர் சிலை கடத்தலில் ஈடுபட்டு கோடிகளில் புரண்டது அம்பலமானது. இவனது கூட்டாளிகளான தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரே வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிலை கடத்தலில் ஈடுபட்டிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இது போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் மூலமாகவே இது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசாரே சிலைகளை கடத்திய பரபரப்பு பின்னணி பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை தெற்கு வீதியில் கேமரா பழுது பார்க்கும் கடை வைத்துள்ள சுந்தர மூர்த்தி என்பவர் ஏராளமான ஐம்பொன் சிலைகளை படம் பிடித்து வைத்திருப்பதாகவும், அவைகளை அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு கடந்த 2008-ம் ஆண்டில் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காதர்பாஷா, போலீஸ்காரர் சுப்புராஜ் ஆகியோர் விரைந்து சென்று இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தை தோண்டிய போது 2 சிலைகள் கிடைத்தது தெரியவந்தது.

அதில் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு சிலையாகும். இன்னொன்று சிவகாமி சிலை இந்த சிலைகளை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் காதர்பாஷா, போலீஸ்காரர் சுப்புராஜ் ஆகியோர், அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை.

அதற்கு மாறாக சிலைகளை பதுக்கி, சிலை கடத்தல் கும்பலை போல செயல்பட்டுள்ளனர். சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியான தீனதயாளனரிடமே இந்த சிலைகளை இன்ஸ்பெக்டரும், போலீசாரும் விலை பேசி விற்பனை செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் அங்கிருந்து இடம் மாறி சென்றுவிட்டனர். போலீஸ்காரர் சுப்புராஜ் பதவி உயர்வு பெற்று கோயம்பேடு சப்-இன்ஸ்பெக்டராகி விட்டார். இன்ஸ்பெக்டர் காதர்பாஷா டி.எஸ்.பி.யாகி விட்டார். தற்போது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் அவர் பணிபுரிந்து வருகிறது. சிலை கடத்தலில் இவர்களுடன் மேலும் ஒரு போலீஸ்காரரும் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி தெரியவந்ததும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலேயே 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுப்புராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். டி.எஸ்.பி. காதர்பாஷாவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் ஆரோக்கியராஜிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகளை சுபாஷ் கபூரின் கூட்டாளியான தீனதயாளனிடம் விற்பனை செய்வதற்காக போலீசார் பேரம் பேசினர். சிலைகளை வாங்கி பார்த்த தீனதயாளன் சேதம் அடைந்திருப்பதாக கூறி வாங்க மறுத்தார். இதனை தொடர்ந்து அவரை மிரட்டி பணிய வைத்துள்ளனர். இந்த சிலைகளை வாங்கிக் கொண்டு அதற்கு உரிய விலையை தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் பயந்து போன தீனதயாளன் ரூ.25 லட்சத்துக்கு சிவன்-பார்வதி, சிவகாமி சிலைகளை வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதன்படி சிலைகளை தீனதயாளனிடமே விற்று போலீசார் பணம் பெற்றுள்ளனர்.

பூமிக்கு அடியில் இருந்து புதையல் போல கிடைத்த சாமி சிலைகளை அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த டி.எஸ்.பி. காதர்பாஷாவும், போலீஸ்காரராக பணிபுரிந்த சுப்புராஜும் மீட்டு கொண்டு வந்து சில மாதங்கள் வரை பத்திரமாக பாதுகாத்தனர். அதன் பின்னரே யாருக்கும் தெரியாமல் சிலைகளை விற்பனை செய்ய இருவரும் வியூகம் வகுத்தனர். அப்போதுதான் தீனதயாளன் சிக்கினார். முதலில் சிலைகளை வாங்க மறுத்த அவரை போலீசார் கடுமையாக மிரட்டியது தெரியவந்துள்ளது.

நாங்கள் கொடுக்கும் சிலைகளை வாங்காவிட்டால் மேலும் பல வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று தீனதயாளனை மிரட்டி பணியவைத்துள்ளனர். தீனதயாளன் கொடுத்த ரூ.25 லட்சம் பணத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கு சரியாக பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரே காட்டிக் கொடுத்து விட்டார் என்கிற தகவலும் கசிந்துள்ளது.

அதே நேரத்தில் சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தீனதயாளனும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் போலீசாரிடமிருந்து சிலைகளை வாங்கியது பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விரிவாக வாக்குமூலமும் அளித்தார். இதன் பின்னரே போலீசாரின் மீதான பிடி இறுகியது குறிப்பிடத்தக்கது.

சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய டி.எஸ்.பி. காதர்பாஷாவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். கீழ்ப்பாக்கத்தில் அவரது வீடு உள்ளது. அங்கு அவரை தேடிச் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.

காதர்பாஷா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் போலீசில் சிக்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை போலீசார் உறுதி செய்யவில்லை.

இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு வட்டாரத்தில் கேட்டபோது அவர் விடுமுறையில் சென்றிருப்பதாக தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராகி வழக்கு பற்றிய விவரங்களை தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.