செய்திகள்

தமிழகத்தில் டெங்குவால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் நான் பேசி உள்ளேன். இன்றும் இதுபற்றி நான் பேசினேன்.

டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர். டெங்கு பரவுவதால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. டெங்கு அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. குமரி மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி அரசு யோசிக்க வேண்டும். அதேசமயம் உயிரிழப்புக்கு இழப்பீடு மட்டும் தீர்வாகாது. அவர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் இதை உடனடியாக கட்டுப்படுத்த அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது அ.தி.மு.க.வின் ஒரு அணியினர் மற்றொரு அணியினர் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். யார், யார் எந்த அணியில் உள்ளனர்? யார் சிலீப்பர் செல் என்பது பற்றி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி 5 ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் நடைபெற்று வரும் பாலங்கள் கட்டும் பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவு பெறும்.

அமித்ஷாவின் மகன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே தெளிவான பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ஏட்டிக்கு போட்டியாக போலி குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தொடர்ந்து முன்னெடுக்கிறது. அரசியலுக்காக புகார் கூறுபவர்களை திருத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.