தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒரு பெரும் படைபலத்துடன் களத்தில் இறங்கி செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
மாநில தீயணைப்புத்துறை, மத்திய, மாநில அரசுகளின் பேரிடர் மீட்புக்குழுவினர், அரசு மருத்துவ குழுவினர், வருவாய்த்துறை, மாவட்ட ஆட்சியர், தனியார் நிறுவனங்கள், மாநில அமைச்சர்கள்... என பெருமுயற்சி நடந்துவருகிறது.
இந்த தீபாவளியை தமிழக மக்கள் ஒருவித தவிப்புடன் கடக்க வேண்டியதானது. மதவேறுபாடுகளைக் கடந்து ஒரு சின்னஞ்சிறு ஜீவன் உயிருக்கு போராடும் நிகழ்வு உண்மையில் பலரைத் தூங்கவிடாமல் துயரத்தில் ஆழ்த்தியதோடு, உள்ளார்ந்த பிரார்த்தனைக்கும், வேண்டுதலுக்கும் அனைத்து மதத்தினரையும் நிர்ப்பந்தித்தது. வருமுன் காப்பதற்குத் தவறி, வந்த பிறகு போர்க்கால நடவடிக்கைகளில் இறங்குவது நம்முடைய இயல்பாகிவிட்டதே இதற்கு காரணம்..
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், நமது வேளாண்மை நிலப்பரப்பில் பாதிக்கும் குறைவான நிலப்பரப்பு தான் ஆற்றுப் பாசனவசதி பெற்றுள்ளன. அவற்றிலும் கூட வருடத்தின் எல்லாநாட்களிலும் தண்ணீர் கிடைக்காது. நீர் மேலாண்மைக் கோளாறுகள், அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் சிக்கல்... ஆகியவற்றால் ஆற்று பாசன விவசாயிகளே இன்று ஆழ்துளை கிணறுகளை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர். அந்த வகையில் இன்று தமிழகத்தில் மட்டுமே சுமார் 20 லட்சம் ஆழ்துளை கிணறுகள் நிலத்தின் அடி ஆழம் வரை சென்று தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன. ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட லட்ச ரூபாய்க்கு மேல் செலவழிக்க தயாராக இருக்கும் மக்கள் அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் அதை முறையாக மூடும் செயல்பாட்டிற்கு ஓரிரு ஆயிரம் கூட செலவழிக்கத் தயாராக இல்லை என்பது தான் வேதனையிலும் வேதனையாகும்! அந்த வகையில் தான் சுஜித்தின் தந்தை பிரிட்டோவும் குற்றமிழைத்து, தன் குழந்தையின் மரண வேதனைக்கு காரணமாகிவிட்டார்.
அதிக அளவு ஆழ்துளை கிணறு உபயோகப்படுத்துவதில் உலகிலேயே முதலிடத்தில் உள்ள நாடு இந்தியா தான்! இந்தியாவில் முறையான நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த தவறியதாலும், நமது பாரம்பரிய நீர் மேலாண்மையை காப்பாற்ற தவறியதாலும் அதிக அளவில் நிலத்தின் அடி ஆழம் வரை சென்று தண்ணீர் எடுக்கும் பழக்கம் 2000-த்தில் இருந்து தான் அதிகமானது. அப்போது முதல் ஆழ்துளை கிணறு ஆபத்துகளும் ஆரம்பித்துவிட்டன. பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை மூடாமல் விடுவதன் மூலம் ஏற்படும் குழந்தை மரணங்கள் 2006 முதல் தான் கவனம் பெறத்தொடங்கியுள்ளன. இந்த வகையில் ஆண்டுதோறும் இத்தகைய மரணங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதுவரையிலும் சுமார் 50 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் சுமார் 70% நிகழ்வில் குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை என்பது தான் சோகம். பெரும்பாலும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே இதில் விழுகின்றனர். அதிலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே அதிகம்!