நடிகர் கோவிந்தா மற்றும் சன்னி தியோல் 
செய்திகள்

அரியானா, மகாராஷ்டிராவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் தீவிர பிரசாரம்

அரியானா, மகாராஷ்டிராவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடிகர், நடிகைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சண்டிகர்:

அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் நட்சத்திர பேச்சாளர்களாக வேட்பாளர்களை ஆதரித்து அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதையடுத்து இரு மாநிலங்களிலும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.

அரியானா மாநிலத்தில் பட்லி தொகுதி பாஜக வேட்பாளர் ஓம் பிரகாஷ் தன்கரை ஆதரித்து நடிகர் சன்னி தியோல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதேபோல், பானிபட் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணன் லால் பவாரை ஆதரித்து உத்தர பிரதேசம் மாநிலத்தின் மதுரா தொகுதி எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி, மகாராஷ்டிரா மாநிலம் மால்கப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயின்சுக் மன்லால் சன்ஜித்தை ஆதரித்து நடிகர் கோவிந்தா ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.