செய்திகள்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பல்சர்பாபு கைது

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பல்சர்பாபுவை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

காசிமேடு பகுதியை சேர்ந்தவன் பாபு என்கிற பல்சர்பாபு. இவன் மீது ஏராளமான வழிப்பறி வழக்குகள் உள்ளன.

‘பல்சர்’ பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறியில் ஈடுபடுவது இவரது ஸ்டைல்.

தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட பாபுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

கடந்த மாதம் அவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவனை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கடந்த மாதம் 14-ந்தேதி அதிகாலை பாபு, டீ குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தெரிவித்தான். அவனை போலீசார் தங்களது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஆஸ்பத்திரி முன்பு உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

டீ குடித்துக் கொண்டு இருந்தபோது பாபு திடீரென போலீஸ்காரர்களை தள்ளி விட்டு அருகில் சாவியுடன் நிறுத்தி இருந்த அவர்களது மோட்டார் சைக்கிளை ஓட்டி தப்பி சென்று விட்டான்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஒரு மாதமாக பாபு போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தான்.

இந்த நிலையில் பாபு, பெருங்களத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று பாபுவை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.