புதுடெல்லி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலம் சீன நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. இருநாட்டு ராணுவ வீரர்களும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது.
ஆனால், எல்லை தாண்டி ஊடுருவியதாக கூறிய இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீன ராணுவம் மறுப்பு தெரிவித்தோடு, இந்திய வீரர்கள் தான் எல்லை தாண்டி வந்ததாக கூறியது. சிக்கிம் மாநிலத்தில் மட்டும் இந்தியாவும் சீனாவும் 220 கிலோமீட்டர் வரை எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இத்தகைய சூழலில், ராணுவ தளபதி பிபின் ராவத் இரண்டு நாள் பயணமாக இன்று சிக்கிம் மாநிலம்சென்றார். சிக்கிம் மாநிலத்தில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.