சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் 
செய்திகள்

சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஸ்டாலின்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் பெற்றோருக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாலை மலர்

திருச்சி:

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக பல்வேறு மீட்புக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 

இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அங்கு சென்று சுஜித்தின் கல்லறையில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். சுஜித்தின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சுஜித்தை இழந்து வாடும் அவனது பெற்றோருக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.