செய்திகள்

பஸ் ஸ்டிரைக்: முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்- மு.க.ஸ்டாலின்- தினகரன் வலியுறுத்தல்

பஸ் தொழிலாளர் பிரச்சினையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் மற்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்கள். #TNAssembly #MKStalin

மாலை மலர்

சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினை குறித்து பேசியதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வேண்டும், 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 19,500 என்று இருக்க வேண்டும். மற்ற ஊழியர்களுக்கு உள்ள சம்பள வித்தியாசத்தை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், நிலுவைத் தொகை ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பித் தர வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கை. முன்பு 2.87 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்டார்கள்.

இப்போது 2.57 சதவீதம் என குறைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். எனவே முதல்- அமைச்சர் அதில் தலையிட்டு பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.

உயர்நீதிமன்றமே பல்வேறு விளக்கங்களை கேட்டு இருக்கிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாணவர்களும், பொது மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே முதல்- அமைச்சர் நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும்.

தொடர்ந்து ராமசாமி (காங்) பேசுகையில், கடந்த 4-ந்தேதி முதல் போக்கு வரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் தமிழக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போக்குவரத்து துறை பெருமளவில் நஷ்டம் அடைந்து இருக்கிறது. நீதிமன்றமே இதுபற்றி கேள்வி கேட்டு இருக்கிறது. எனவே நிர்வாகத்தை சீர்படுத்த வேண்டும். உடனடியாக முதல்- அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.

டி.டி.வி.தினகரன் (சுயே) பேசுகையில், இது அம்மாவின் அரசு என்று சொல்லிக் கொள்கிறீர்கள். தமிழக மக்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் சரியான தீர்வு காண வேண்டும். முதல்- அமைச்சர் இதில் தலையிட்டு அம்மா அரசு இது என்று உறுதிப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றார். #TNAssembly #MKStalin #TTVDhinakaran #tamilnews