செய்திகள்

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிற‌து. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிற‌து. குறிப்பாக, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1955ம் ஆண்டிற்கு பிறகு, 62 வருடங்களில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்தது. கன மழையினால் தாழ்வான பகுதியில் மழை நீர் உட்புகாமல் தடுக்கவும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அதிகாரிகள் அடங்கிய 13 குழுக்கள் கண்காணித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு குழுவிலும் 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று மழை நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்காக 10 நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், 12 கனரக மோட்டார் பம்புகள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக‌ நடைபெற்று வருகிறது.தொடர்ந்து மழைக்கான வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, காவல்துறை மூலம் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு அருகில் உள்ள பள்ளிக் கூடங்கள், திருமண மண்டபங்கள் என 154 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன‌. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக 1077 மற்றும் 0461 - 2340101 என்ற எண்களிலும், வாட்ஸ் அப் எண் 9486454714 உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவுறுத்தி உள்ளார். #tamilnews