செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 96.98 சதவீதம் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் திருச்சி மாவட்டத்தில் 96.98 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாலை மலர்

திருச்சி:

தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 10-ம் வகுப்பு  பொதுத் தேர்வில் திருச்சி மாவட்டத்தில் முசிறி கல்வி மாவட்டத்தில் 109 உயர் நிலைப்பள்ளிகளில் 4,277 மாணவர்களும், 4,302 மாணவியர்களும் என மொத்தம் 8,579 மாணவ- மாணவியர்களும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 77 உயர் நிலைப்பள்ளிகளில் 3,198 மாணவர்களும், 3,033 மாணவிகளும் என மொத்தம் 6,231 மாணவ- மாணவிகளும், திருச்சி கல்வி மாவட்டத்தில் 250 உயர்நிலைப்பள்ளிகளில் 11,435 மாணவர்களும், 11,772 மாணவிகளும் என மொத்தம் 23,207 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினர்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 434 உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து  மொத்தம் 18,974 மாணவர்களும், 18,729 மாணவிகளும் என மொத்தம் 37703 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வினை எழுதினர்.  இந்த நிலையில் இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 96.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழக அளவில் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

தேர்வு எழுதிய  மாணவர்கள் 18974 பேரில் 18,126 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.53 சதவீத தேர்ச்சியாகும். மாணவிகள்  18,729 பேரில் 18,439 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.45 சதவீத தேர்ச்சியாகும். மேலும் பாடவாரியாக சமூக அறிவியல்  பாடத்தில் 99.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 98.79 சதவீதம், ஆங்கிலத்தில் 98.82 சதவீதம்,  கணிதத்தில் 98.15 சதவீதம், தமிழில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 178-ல் 72 பள்ளிகள் 100   சதவீதம்  தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு  திருச்சி  மாவட்டம் 92.22 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.

தேர்ச்சி பட்டியலை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வெளியிட்டார். அப்போது மாவட்ட கல்வி அதிகாரிகள் குயின் எலிசபெத், யாமினி தேவி, அருமைக்கண் ஆகியோர் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் 313 பள்ளிகள் உள்ளன. இதில் மாணவர்கள் 12,081 பேரும், மாணவிகள் 12,460 பேரும் என மொத்தம் 24,541 பேர் தேர்வு எழுதினர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.70 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்தம்  303 பள்ளிகளில் 136 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 201 அரசு பள்ளிகளில் 63 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 6,590 மாணவர்கள், 6,417 மாணவிகள் என மொத்தம் 13,007 பேர் எழுதினர். இதில் 6,204 மாணவர்களும்,  6,179 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 12,383 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களில் 94.14 சதவீதமும், மாணவிகளில் 96.29 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்தமாக இது 94.14 சதவீதமாகும்.